ஓய்வு பெறும் நாளில் ரவிவர்மா ஓவியம் போல் வேடமிட்டு ஆசிரியையை நெகிழ வைத்த தோழிகள்

200 0

ஓய்வு பெறும் நாளில் சக தோழிகள் ரவிவர்மா ஓவியங்கள் போல வேடமிட்டு பரிசளித்ததை கண்டு ஆசிரியை கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வுபெறும் நாளில் சக ஊழியர்களால் பிரிவு உபசார விழா நடப்பது வழக்கம்.

இத்தகைய விழாக்களில் ஓய்வு பெறும் நபரின் சிறப்புகளை பேசி பொன்னாடை அணிவித்து அவரை வழியனுப்பி வைப்பது வழக்கம்.

ஆனால் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பேராசிரியைக்கு சக ஊழியர்கள் நடத்திய பிரிவு உபசார விழா சமூகவலை தளத்தில் பரவி பாராட்டை குவித்து வருகிறது. அதன்விபரம் வருமாறு:-

எர்ணாகுளம் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருபவர் டாக்டர் லதா நாயர். ஆங்கில பேராசிரியையான அவர் கல்லூரியில் 33 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பணி காலத்தில் சக ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் அன்பாக பழகியதால் அனைவரும் லதாவிடம் மிகவும் பிரியமாக இருந்தனர்.

பேராசிரியை லதாவுக்கு ரவிவர்மா ஓவியங்கள் என்றால் உயிர். இதை பலமுறை சக ஆசிரியைகளிடம் கூறியுள்ளார்.

எனவே பேராசிரியை லதா ஓய்வு பெறும் நாளில் அவருக்கு பிடித்த ரவிவர்மா ஓவியங்களை பரிசளிக்க சக ஆசிரியைகள் விரும்பினர். அப்போது சில மாணவிகள், இந்த பரிசை அளிக்கும்போது ரவிவர்மா ஓவியம் போல வேடமிட்டு கொடுக்கலாமே என கேட்டனர்.

இதற்கு ஒப்புக்கொண்ட சக ஆசிரியைகள் 12 பேர், பேராசிரியை லதாவுக்கு பிரிவு உபசார விழா நடந்தபோது, ரவிவர்மா வரைந்த ஓவியங்கள் போல் வேடமிட்டனர்.

இதற்காக சினிமா மேக்கப் கலைஞர்களை அழைத்து வந்த ஒவ்வொரு ஆசிரியைகளும் மேக் அப் போட்டு கொண்டனர். இவை எதுவும் பேராசிரியை லதாவுக்கு தெரியாது. விழா மேடைக்கு அவர் வந்தபோது தான் இதுதெரியவந்தது. சக தோழிகள் ரவிவர்மா ஓவியங்கள் போல் வேடமிட்டு பரிசளித்ததை கண்டு அவர் நெகிழ்ந்து போனார்.

அவரது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது. இக்காட்சிகளை கல்லூரி மாணவிகள் சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.