பிரச்சினைகளைக் கையாள்வதற்கான உத்தியாக இராணுவமயமாக்கலைப் பயன்படுத்துகிறது அரசாங்கம் – அம்பிகா சற்குணநாதன்

137 0

நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ஓர் உத்தியாக அரசாங்கம் இராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அது மனித உரிமைகள் மீறப்படுவதற்கு வழிவகுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்புநிலையங்களில் இராணுவத்தினர் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் நேற்று செவ்வாய்கிழமை அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளைக் கையாள்வதற்குரிய ஓர் உத்தியாக இராணுவமயமாக்கலை மேற்கொண்டுவருகின்றது.

போரின் பின்னர் ராஜபக்ஷவின் முன்னை அரசாங்கத்தில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கல் தீவிரமடைந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின்போது அந்த இராணுவமயமாக்கல் நிலை நீக்கப்படவில்லை. அதுமாத்திரமன்றி 2019 ஆம் ஆண்டின் பின்னர் இராணுவமயமாக்கல் மீண்டும் தீவிரமடைந்தது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 12 ஆவது பிரிவின் பிரகாரம், சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்காக வர்த்தானி அறிவித்தல் ஜனாதிபதியினால் மாதாந்தம் புதுப்பித்து வெளியிடப்படுகின்றது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இறுதியாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

சிறைச்சாலை நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு, புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றிலும் இராணுவமயமாக்கம் இடம்பெறுவதை அவதானிக்கமுடிவதுடன், அது உரிமைகள் மீறப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.