பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்காலத்தில் புதிய தனிச்சட்டமாக்கப்பட வேண்டும் – சரத் வீரசேகர

165 0

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு மிக அவசியமானது. தற்போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் அது இன்னும் பல திருத்தங்களுடன் முழுமையான சட்டமாக கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்  சட்டமூல  இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

1979ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் .ஜெயவர்தன  விடுதலைப்புலி பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே  பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள பழைய சட்டத்தில் திருத்தம் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் பயங்கரவாத தடைச் சட்டங்களைப் பார்த்து இதில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தனியான சட்டமாக இது கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

பயங்கரவாதம் உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாகியுள்ள நிலையில் அதற்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகள்  அவசியமாகிறது.

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்பவர்களும் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவர். அந்தவகையில் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிட வசதி வழங்குவோர் மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களுக்கு உதவி செய்பவர்கள் சர்வதேச ரீதியில் பயங்கரவாதிகளாகவே கருதப்படுகின்றனர். சர்வதேச நாடுகளிலுள்ள சட்டங்களை பார்க்கும்போது நீதிமன்ற உத்தரவுக்கு அப்பாலும் தடுத்து வைக்கப்படலாம் என அவற்றில் கூறப்படுகிறது.

அத்துடன் எமது நாட்டில் எல்லைக் கிராம தாக்குதல், ஈஸ்டர் தாக்குதல் போன்ற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதற்கு இந்த சட்டம் அவசியமாகும்.

அத்துடன் சைபர் தாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சைபர் தாக்குதல்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றை தடுப்பதற்கும் இந்த சட்டத்தில் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றார்.