பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தாலும் சட்டத்தின் அடிப்படைகளில் எந்த மாற்றமுல் இல்லை – முஜிபுர் ரஹ்மான்

174 0

நீதியமைச்சர் அலி சப்ரியின் பொறுப்பில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்ட விடயத்துக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீாிஸ் திருத்தம் கொண்டுவந்துள்ளதன் மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தவே  திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பது உறுதியாகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்  சட்டமூல  இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

இலங்கை அரசுக்கு இன்று சர்வதேசத்தில் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அதனை குறைக்க எடுக்கப்படும் முயற்சியே பயங்கரவாத தடைச்சட்டத்துக்கான திருத்தமாகும்.  அதனால்தான்  பயங்கரவாத தடைச்சட்ட விடயம், நீதியமைச்சர் அலி சப்ரியின் பொறுப்பில் இருக்கின்றபோதும் இந்த திருத்தத்தை வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீாிஸ் கொண்டு வந்துள்ளார்.

இதன் மூலம் பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் இலங்கை  மக்களின் உரிமைகளை பாதுகாக்க கொண்டு வரப்படவில்லை. மாறாக சர்வதேசத்தை திருப்திப்படுத்தவே  கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

அத்துடன் இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும் புதிய திருத்தத்தின்படி, சட்டத்தின் அடிப்படைகள் மாறவில்லை.   விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு சந்தேகம் ஏற்பட்டால் ஒருவரை  இந்த சட்டத்தி்ன்கீழ் கைதுசெய்து தடுத்து வைக்கமுடியும்.

18 மாதங்களுக்கு வீட்டுக்காவலில் ஒருவரை தடுத்து வைக்கமுடியும் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரை நீதிவான் ஒருவர் சென்று பார்க்கமுடியும். அவர் தொடர்பில் உத்தரவுகளை வழங்கமுடியும். எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் இடத்தை மாற்றுவதற்கு நீதிவானுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.  என்றாலும் திருத்தத்தின்போது அந்த அதிகாரம் நீதிவானுக்கு வழங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறு வழங்குவது நல்லது.

மேலும் அமைச்சருக்கு சந்தேகம் உள்ள ஒருவரை பொலிஸில்  தடுத்துவைக்காமல், தேவையான இடத்தில் தடுத்து வைக்கமுடியும் என்ற அடிப்படையிலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இது பாரிய பிரச்சினை. அமைச்சருக்கு வரையறை இல்லாத அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின்போது ஒருவர் எவரையாவது சுட்டிக்காட்டினால் அவரையும் 12 மாதங்களுக்கு தடுத்து வைக்கமுடியும் என்ற விடயத்திலும் திருத்தம் கொண்டு வரப்படவில்லை.

இந்நிலையில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோதும் அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை.எனினும் அவரை தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் ஜசீமிடம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நபர்களை பழிவாங்க இந்த சட்டத்தை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் அதன் பிரகாரமே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை தடுத்துவைக்கவேண்டிய தேவை இந்த அரசாங்கத்தில் யாருக்கு இருந்தது என கேட்கின்றேன் அதேபோல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சஹ்ரானுடன் இணைந்திருந்த சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள், ஆனால் அப்பாவிகள் பலர் இன்னும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்  என்றார்.