குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது- சிறிசேன

276 0

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பிணைமுறி தொடர்பான சம்பவங்களை மூடி மறைப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எனினும், ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகம் என்பன அதிகளவில் காணப்பட்ட கடந்த அரசாங்கத்திலிருந்து தான் பதவி விலகியது மீண்டும் அவ்வாறானதொரு நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல என்று ஜனாதிபதி கூறினார்.

பிணைமுறி தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதாக மட்டுமே இருந்தது என்று கூறிய ஜனாதிபதி, தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உண்மையாக நிறைவேற்றுவதற்கு அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிணைமுறி சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் ஜனாதிபதி என்ற வகையில் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும், மக்களின் நம்பிக்கையுடனேயே தான் எச்சந்தர்ப்பத்திலும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கடந்த இரு வருடங்களில் இடம்பெற்ற பிணைமுறி சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளாக காணப்படுவோருக்கு தகுந்த தண்டனையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கடந்த எழு அல்லது எட்டு வருட காலங்களாக நடைபெற்ற பிணைமுறி தொடர்பான சம்பவங்கள் குறித்தும் இவ்வாறான ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.