மேலூரில் ரூ. 3 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது

164 0

மேலூரில் காரில் கடத்தி வரப்பட்ட திமிங்கல எச்சம், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கார், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் சிவகங்கை சாலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக தி.மு.க. கொடியுடன் வந்த காரை மடக்கி அதனை சோதனை செய்தனர். காரின் உள்ளே 2.5 கிலோ திமிங்கல எச்சத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து திமிங்கல எச்சத்தை கடத்தி வந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் உறவினரான திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடியை சேர்ந்த அழகு, நத்தம் சீர்வீடு பகுதியை சேர்ந்த பழனிசாமி, நத்தம் பகுதியை சேர்ந்தகுமார் ஆகிய 3 பேரையும் சிறப்பு தனிப்படை போலீசார், மேலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காரில் கடத்தி வரப்பட்ட திமிங்கல எச்சம், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கார், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை மேலூர் டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் வனத்துறையினரிடம் திமிங்கல எச்சம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தப்பட்ட 2.5 கிலோ திமிங்கல எச்சம் சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ளதாக இருக்கலாம் என்பதால் இந்த எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? இதில் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.