சட்டவிரோதமாக சிகரெட் விற்க முற்பட்டவர்களுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்

249 0

துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற இருவருக்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தினால் 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சிகரெட்டுக்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வேனையும் பறிமுதல் செய்யுமாறு தம்புள்ளை நீதவான் உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர்கள் அரணாயக – கெடபேரிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் அன்வர் மொஹமட் நாசீர் மற்றும் மொஹமட் ராசிக் அஹமத் ரீலா எனத் தெரியவந்துள்ளது.

விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பிஸ்கட்டுக்களுடன் குறித்த சிகரெட்டுக்களும் மறைத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, விற்பனைக்காக இவை கொண்டு செல்லப்பட்ட வேளை, பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் வசம் இருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஒருதொகை சிகரெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது.