உக்ரைன்- ரஷியா போருக்கிடையே போலந்து செல்கிறார் ஜோ பைடன்

205 0

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் எல்லை நாடான போலந்து செல்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஹைப்பர்சோனிக் உள்ளிட்ட பயங்கரமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேட்டோ நாடு தலைவர்கள், ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ படைன் அடுத்த வாரம் பெல்ஜியம் செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது வருகிற வெள்ளிக்கிழமை நேட்டோ நாடான போலந்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
போலந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் போலந்திற்கு அகதிகளாக வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து செல்லும் ஜோ பைடன் அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரிசெஜ் டுடாவை சந்தித்து பேசுகிறார். போலந்து பயணத்தின்போது உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் நெருக்கடி குறித்த சர்வதேச நாடுகள் பதில் அளிப்பது என்பது குறித்து விவாதிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.