வருகிற 31-ந்தேதிக்குள் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

184 0

பயிர்கடன் வைத்து இருப்பவர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி அனுமதி இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் பொது, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்து பேசியதாவது:-

புதுக்கோட்டை, ஆரணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஆட்சிக்காலத்தில் நகை கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு வங்கியிலும் 2 கோடியே 39 லட்சம் மதிப்பிலான போலி நகைகளை வைத்து மோசடி செய்துள்ளனர்.

சில இடங்களில் ஏட்டிலே கடன் எழுதி வைக்கப்பட்டு பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதற்காக தணிக்கை குழு ஆய்வு செய்து தற்போது கடந்த சனிக்கிழமை அன்று 325 கோடி ரூபாய் 95 ஆயிரம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பயிர்கடன் வைத்து இருப்பவர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்களுக்கு இந்த நகை கடன் தள்ளுபடி அனுமதி இல்லை. அந்த அடிப்படையில் வருகிற 10 நாட்களுக்குள் 14 லட்சத்து 60 ஆயிரம் பேரின் நகைகடன் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.