என்று முடியும் காவிரி போராட்டம்?:- பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வேதனை

163 0

ஆர்.எஸ். பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை ஜனநாயகத்தை மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.தமிழக சட்டசபையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக  தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காவிரி பிரச்சனை குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

* என்று தனியும் இந்த சுந்திர தாகம் என்று பாரதி பாடியது போல், என்று முடியும் இந்த காவிரி போராட்டம்? என்ற வேதனையோடு மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்காக கொண்டு வருகிறேன்.

* போராட்டம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. முடியும் நிலை வரவில்லை.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அவதாரத்தை எடுக்கிறது. காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு உரிமை உண்டு என்ற ஒப்பந்தம் இருந்தாலும், ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று போராட்டத்தை துவக்கியது கர்நாடக அரசு.

* இல்லை என அதற்கான காரணத்தை கூறி நாம் அதை முறியடித்தோம்.

*  தண்ணீர் பிரச்சினையை தீர்க்க டிரிபுனல் அமைக்க முடிவும் செய்தோம். அதற்கும் முட்டுக்கட்டை போட்டோம். அதையும் முறியடித்தோம்.

* இடைக்கால தீர்ப்புக்கும் முட்டுக்கட்டை. அதையும் வென்றோம்.

* ஆணையம் போட வேண்டும் என்றோம். அதையும் தேவையில்லை என்றார்கள். அதையும் வென்று காட்டினோம்.

* தீர்ப்பு வந்தது. அதை கெஜட்டில் போடமாட்டோம் என்றார்கள். போராடி அதையும் போட வைத்தோம்.

* காவிரி ஆணையம், அதற்கான தலைவர்கள் என ஒவ்வொரு முறையும் போராடினோம்.

* இந்த பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் என போகுமோ என்று பார்க்கிறேன். எதிர்க்கும் சக்தி, வீரியம் இருப்பதாக சந்தேகப்படுகிறேன். காரணம் எதையும் எதிர்ப்பதாக இருக்கிறார்கள்.

*   சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு கூட அணைக் கட்டப் போகிறோம் என்கிறார்கள். இது புதிதல்ல, குண்டு ராவ் கூட அணைக் கட்ட போகிறோம். யாரையும் கேட்க தேவையில்லை என்றார்.

* குமாரசாமி, எடியூரப்பா என எல்லோரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பா.ஜனதாவ இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.

* தமிழக சட்டசபையில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம். காவிரி பிரச்சினையில் யார் யோக்கியேன் என்பதை விட்டுவிட வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.