மேகதாது அணையை கர்நாடகாவில் கட்ட அனுமதி தருவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டசபையில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சியும் ஆதரவு தெரிவித்தன. அதன் தொடர்ச்சியாக பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அணை குறித்த முன்னுரையிலேயே பல்வேறு வரலாற்றை பதிவிட்டு பேசினார்.
மேலும், தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றி இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாது அணையை கர்நாடகாவில் கட்ட அனுமதி தருவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நடுவர்மன்றத் தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராகவும் கர்நாடக அரசு மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும்.
கர்நாடக அரசு மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கையை சட்ட ரீதியாகவும், அனைத்து வடிவிலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும், தமிழர்களின் நலனை, அரசு நிச்சயம் பாதுகாப்பதோடு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.