இந்தியாவுடனான ஒப்பந்த இரகசியங்களை வெளிப்படுத்துங்கள் – முஜிபுர் ரஹ்மான்

186 0

இந்தியாவிடம் ஒரு பில்லியன் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவை என்பதை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். மத்தள விமான நிலையம், சம்பூர் அல்லது யாழ் தீவுகள் என இந்தியாவிற்கு எதனை வழங்க திட்டமிட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் ,

உரிய தீர்மானங்களை பொறுத்தமான நேரத்தில் எடுக்காமைக்கான காரணம் என்ன? ஜனாதிபதியை தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என்று கூறுபவர்கள் யார்? கடந்த 2 ஆண்டுகளாகவே மக்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர்.

அவ்வாறிருக்கையில் மக்களிடமிருந்து ஜனாதிபதி வேறென்ன தியாகங்களை எதிர்பார்க்கின்றார்? தற்போது எஞ்சியிருப்பது கயிறொன்றை வாங்கி தற்கொலை செய்து கொள்வது மாத்திரமேயாகும்.

அரசாங்கத்திலிருந்து விலகிய அமைச்சர்களே இனிமேலும் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்று கூறுகின்ற நிலையில் மக்கள் எவ்வாறு நம்புவார்கள்? மக்கள் கேட்டுக் கொண்டமையின் காரணமாகவே தான் அரசியலில் பிரவேசித்தாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் தற்போது அவரை பதவி விலகுமாறு மக்கள் கோருகின்றனர்.

எனவே அவர் பதவி விலக வேண்டுமல்லவா? மேலும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் நீடித்தால் நாடு மேலும் நாசமடைந்து விடும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

சமையல் எரிவாயு கப்பல்கள் இரண்டு கடந்த 12 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான தாமத கட்டணம் 4 இலட்சத்து 22,000 டொலர்களாகும். அதாவது 12 கோடி ரூபாய் தாமத கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியிலுள்ள நிலையில் இவ்வாறு வீணாக செலவிடும் பணம் மக்களுடையதாகும்.

தற்போது இந்தியாவிற்குச் சென்று 1 பில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதத்தினை அந்நாட்டிலிருந்து பொருள் இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவரி வேறு என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

மத்தள விமான நிலையம் , சம்பூர் , யாழ் தீவுகள் என இந்தியாவிற்கு எதனை வழங்க திட்டமிட்டுள்ளனர் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.