தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும் – சஜித்

179 0

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி  சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலத்தை அல்லது அதனை ஒத்த வேறு சட்டமூலத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத ஒழிப்பு திருத்தச்சட்டமூல வரைபுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள மகஜருக்கான கையொப்பம் பெறும் நிகழ்வு நேற்றுமுன்தினம் மாத்தறையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் இன்றைக்கு பொருந்தாது.

அதனை முற்றாக நீக்கி தற்போதைய நிலைமைக்கு பொருந்தும் வகையில் மனித சுதந்திரத்தை பாதுகாக்கும், மனித உரிமைகளை காக்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலமொன்றையோ அல்லது அதனை ஒத்த வேறு சட்டமூலமொன்றையோ கொண்டு வர வேண்டும்.

தற்போது நடைமுறையில் இருப்பது விமர்சன கருத்துக்களை பொறுக்க முடியாத பழிவாங்கும் சட்டமூலம் என்பதுடன் , இதன் மூலம் பழிவாங்கல் மற்றும் சந்தர்ப்பவாதமே மேலோங்கும்.

எனவே இதனை உடன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

குறித்த மகஜரில் பயங்கரவாத சட்ட மூலத்திலுள்ள குறைப்பாடுகள் தொடர்பிலும் அதனை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான அவசியம் குறித்தும் இந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் கடிதத்தையும் வழங்கினார்.

இந் நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன்  மற்றும் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண உட்பட பலரும் கலந்து கொண்டனர்.