கல்வியில் ஒற்றுமைக்கு தடையான தீவிரவாத போதனைகள் ஊக்குவிக்கப்படக் கூடாது – கல்வி அமைச்சின் செயலாளர்

186 0

கல்வியில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தடையாக இருக்கின்ற தீவிரவாத போதனைகள் ஊக்குவிக்கப்படக்கூடாது என்று ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின்  உறுப்பினர்களிடம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஒரே நாடு – ஒரே ஒரே சட்டம் உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக கடந்த அரசாங்கத்தில் அந்த நிதியத்தின் பணத்தை பயன்படுத்தியதன் காரணமாக, கலாசார நிதியத்தின் அடிப்படைப் பணிகளுக்கு நிதி இல்லை என தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் அண்மையில் தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய பாரம்பரியம் மற்றும் தொல்பொருள்களை பாதுகாப்பது தொடர்பான சட்டம்,  அனைத்து இன மக்களுக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில்  பல்வேறு மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் இச்செயலணிக்கு தகவல்களை வழங்கியுள்ளதாக இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி  முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டிய இராஜாங்க அமைச்சர், தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும், அந்த இடங்களைப் பாதுகாப்பதற்கும் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லை என்றும், இந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மத்திய கலாசார நிதியத்தின் நிலையான சேமிப்புகளில் முதலீடு செய்த 25 000 மில்லியன் ரூபாவை கடந்த அரசாங்கத்தின் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் அடிப்படை நோக்கங்களுக்குப் புறம்பாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை தெரிய வந்துள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது சமமாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய  உரிமையாகும். அந்த பொதுக் கல்வியில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தடையாக இருக்கின்ற தீவிரவாத போதனைகள் ஊக்குவிக்கப்படக்கூடாது.

செயலணியின்  உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேராவை சந்தித்தபோதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, அக்கருத்தியலை ஆய்வு செய்ததன் பின்னர் நாட்டில் அதனை அமுல்படுத்துவதற்காக கருத்தியல் அறிக்கையொன்றை  சமர்பிப்பதற்காக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஞானசார தேரரின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, தற்போது நாட்டின் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில், பொதுமக்களின் கருத்துக்களையும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றது.