பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை – சீ.வை.பி.ராம்

290 0

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தையே மக்கள் ஜனாதிபதியின் உரையில் எதிர்பார்த்தனர். அவ்வாறான எந்த விடயங்களையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. அதனால்  மக்களை சமாளிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அத்துடன் அரசாங்கத்திடமும் எந்த வேலைத்திட்டமும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் பொருளாதார முகாமைத்துவ ஆலாேசகருமான சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.

நாடு பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். நாளாந்தம் தொழில் செய்து குடும்பத்தை கொண்டுசெல்பவர்கள் உட்பட அனைத்து மக்களும் மூன்றுவேளை உணவுக்கு கஷ்டப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக எரிபொருள் பிரச்சினை காரணமாக நாட்டின் அனைத்து துறைகளும் ஸ்தம்பித்துள்ளன. வருமானம் இழக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் எவ்வாறான தீர்வுகளை முன்வைக்கப்போகின்றது என்பதையே மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்திலேயே கொவிட் தொற்று நிலை ஏற்பட்டதால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.  உலகில் ஏனைய நாடுகளும் இந்த கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டபோதும் அந்த நாடுகளின் பொருளாதாரம் இந்தளவு வீழ்ச்சியடையவில்லை.

அந்த நாடுகள் இழக்கப்பட்ட பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப திட்டமிட்டு செயற்பட்டன. ஆனால் எமது ஆட்சியாளர்கள் அதனை செய்யவில்லை. பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. மாறாக பணம் அச்சிடுவதே அரசாங்கத்தின் தீர்வாக இருந்தது.

அத்துடன் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றபோதும் அதுதொடர்பில் ஜனாதிபதி எந்த வார்த்தையும் தெரிவிக்காமல் இருந்துவந்தார். தொடர்ந்து அவ்வாறு இருக்க முடியாமலேயே நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்ற முன்வந்தார்.

ஜனாதிபதி தனது உரையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்வுத்திட்டங்களை தெரிவிப்பார் என்றே மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவ்வாறான எந்த விடயத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

மாறாக நாட்டின் தலைவர் என்றவகையில் மக்களுக்கு உரையாற்றவேண்டும் என்பதற்காக சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு சென்றார். இது மக்களை சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உரையாகவே நாங்கள் காண்கின்றோம்.

அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப திட்டமிட்டு செயற்பட்டிருந்தன.

ஆனால் எமது நாடு மாத்திரமே பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றது.அரசாங்கத்திடம் சரியான பொருளாதார முகாமைத்தும் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

மேலும் ஜனாதிபதி பொருளாதார சபை ஒன்றை உருவாக்கி அதற்கு ஆலாேசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்திருக்கின்றார். அந்த நிபுணர்கள் குழுவில் 90 வீதமானவர்கள் செல்வந்தர்கள். அவர்களுக்கு சாதாரண மக்களின் நிலைமை புரியாது.

அதேபோன்று அந்த குழுவில் நியமிக்கப்பட்டிருப்பவர்களுக்கு பொருளாதாரம் தொடர்பான அறிவு இருந்தாலும் அனுபவம் இல்லாதவர்கள். அதனால்  இவர்களால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முறையான ஆலாேசனை வழங்க முடியாது.

எனவே அரசாங்கம் பொருளாதாரம் தொடர்பான அனுபவம் உள்ளவர்களை இந்த குழுவில் நியமித்து முறையான வேலைத்திட்டத்தை அமைக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாடு மேலும் பாதிக்கப்படும் நிலையே இருக்கின்றது என்றார்.