போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் நிவாரண பொருட்கள் அனுப்பப்படும்- இந்தியா உறுதி

174 0

உக்ரைன் முழுவதும் போரை உடனடியாக நிறுத்த ரஷியாவை மீண்டும் வலியுறுத்துவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் இந்திய குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷிய போர்குறித்து விவாதிக்க கோரி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அல்பேனியா, அயர்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது
உக்ரைனில் போரால் பொதுமக்கள் உயிரிழக்கும் நிலைமை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது. இந்த போரால் லட்சக்கணக்கான  மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். ஐ.நா.வின் முன்முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.
உக்ரைன் முழுவதும் போரை உடனடியாக நிறுத்துவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நமது பிரதமர் இதைப் பலமுறை வலியுறுத்தியதோடு, உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனில் இருந்து சுமார் 22,500 இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளோம்.
மேலும் 18 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதி செய்வதில் உக்ரைன் அதிகாரிகள் மற்றும்  அதன் அண்டை நாடுகளின்
உதவியதை நாங்கள் பாராட்டுகிறோம்.
உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான சூழ்நிலைக்கு ஏற்ப, வரும் நாட்களில் மேலும் நிவாரண பொருட்களை அனுப்பும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
மருந்துகள், நிவாரண உதவிகள் உட்பட 90 டன் அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.