எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்?

143 0

எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள் எனவே இலங்கை அரசிற்கு ஒரு இலட்சம் இல்லை அதேபோன்று பத்து மடங்கு பணத்தினை நாங்கள் தருகின்றோம். உங்களிடம் கையளித்த உறவுகளை மீட்டுத்தாருங்கள் என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று  (16) முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க  தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் மேற்கொண்ட ஊடக சந்திப்பின் ஊடாக இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போனோரின் குடும்பங்களைப் மீள்வாழ்வளிப்பதற்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசின் இந்த அறிவித்தலுக்கு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பினை தெரிவித்து இவ்வாறு தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போனோர் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாவை செலுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது ஓ எம் பி அலுவலகம் ஊடாக அரசு மேற்கொள்ளும் சர்வதேசத்தை ஏமாற்றும் இன்னுமொரு நடவடிக்கை நாங்கள் இலங்கை இராணுவத்தினரிடம் எங்களது உயிர்களை உறவுகளை ஒப்படைத்திருக்கிறோம் ஒப்படைத்த உறவுகளை இவர்கள் என்ன செய்தார்கள் ? இவர்களது அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என்று சொல்லி இவர்கள் தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள் ,நாங்கள் இந்த ஒருலட்சத்தை வாங்குவதற்காக இத்தனை நாட்களாக நீதிகேட்டு வீதியில் இறங்கி போராடவில்லை எமக்கு  ஒரு இலட்சம் வேண்டாம். நாங்கள் இதனைவிட பத்து மடங்கு  அல்லது இருபது மடங்கு பணத்தினை உங்களுக்கு  தருகின்றோம் நாங்கள் கையளித்த உறவுகளை அவர்கள் தேடிக்கண்டறிந்து எங்களிடம் கையளிக்கட்டும்.

அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக அவர்கள்  வழங்கும் நட்டஈடு ஒரு இலட்சத்தினையோ மரண சன்றிதழையோ,காணாமப்படவில்லை என்ற சான்றிதழையோ நாங்கள் பெற்றுக்கொள்ள தயாராக இல்லை  உள்நாட்டு பொறிமுறையூடாக இந்த நாட்டில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக  நீதி கிடைக்காது என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். அதனால்தான் சர்வதேசமூடாக நாங்கள் நீதியை கோரி நிற்கின்றோம் எங்களுக்கான நீதி என்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அரசை நிறுத்தி  அங்கு இடம்பெறும் விசாரணையூடாக கிடைக்கவேண்டும்.

உறவுகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.