தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது

148 0

நீர்கொழும்பு மற்றும் வெலிசறை ஆகிய நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைகுண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ராகம பொலிஸ் பிரிவில் பொல்காஹென சந்தியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டுடன் 32 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவருக்கு எதிராக கம்பஹா, மஹர, வெலிசறை மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நீதிமன்றங்களில் சுமார் 15 வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

அதே போன்று நீர்கொழும்பு மற்றும் வெலிசறை ஆகிய நீதிமன்றங்களினால் குறித்த சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவருடன் இணைந்து தங்க சங்கிலிகளை கொள்ளையிட்ட மேலும் இரு சந்தேகநபர்களும் , இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்க சங்கிலிகளை விற்பனை செய்யும் மேலும் 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 – 42 வயதுகளுக்கு இடைப்பட்ட பட்டுவத்த, ராகம, கந்தானை மற்றும் ஜாஎல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

9 கொள்ளை சம்பங்களில் இவர்களால் கொள்ளையிடப்பட்ட 34 கிராம் தங்கம் மற்றும் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.