புகையிரத சேவையினை விரிவுப்படுத்துமாறு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் கோரிக்கை

185 0

பஸ் கட்டண அதிகரிப்பினால் பொது பயணிகள் தற்போது புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

பொது பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு சனநெரிசல் நிலவும் புகையிரத சேவை வலயங்களில் புகையிரத சேவையினை விரிவுப்படுத்துமாறு வலியுறுத்தி புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர போக்குவரத்து அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எரிபொருள் விலையேற்றததை தொடர்ந்து பொது மக்கள் தனிப்பட்ட வாகன பயன்பாட்டை தவிர்த்து பொது போக்குவரத்து சேவையினை குறிப்பாக புகையிரத போக்குவரத்து சேவையினை அதிகளவில் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பொது பயணிகள் பஸ் போக்குவரத்து சேவை பயன்பாட்டை மட்டுப்படுத்தி புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக சனநெரிசல் மிக்க புகையிரத சேவை வலயங்களான பொல்ஹாவெல – கொழும்பு கோட்டை, நீர்க்கொழும்பு –கொழும்பு கோட்டை, அளுத்கம – கொழும்பு கோட்டை, மருதானை மற்றும் அவிசாவலை – கொழும்பு கோட்டை ஆகிய வலயங்களில் புகையிரத போக்குவரத்து சேவையில் வழமைக்கு மாறாக கடந்த நாட்களில் அதிக வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதிக சனநெரிசல் நிலவும் புகையிரத சேவை வலயங்களில் வழமைக்கு மாறாக மேலதிகமாக புகையிரதங்களை சேவையில் ஈடுப்படுத்தல், சன நெரிசலை கருத்திற்கொண்டு மேலதிக புகையிரத பெட்டிகளை இணைத்தல், நடைமுறையில் உள்ள புகையிரத சேவை அட்டவணையை தற்காலிகமாக திருத்தியமைத்தல், உள்ளிட்ட யோசனைகளை செயற்படுத்துமாறு வலியுறுத்துகிறோம்.