நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன் -கோட்டாபய

195 0

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (16) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அவர் தனது உரையில்,

இன்று ஒரு சவாலான நேரத்தல் நாள் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன்.

எரிவாயு தட்டுப்பாடு அதேபோன்று எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன். நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்துள்ளேன். இதன் மூலம் நான் எடுக்கும் தீர்மானங்கள் செயற்படுத்தப்படுகின்றதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுப்பேன். எனவே. மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு உங்களை முதலில் கேட்டுக் கொள்கிறேன்.நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர். நாங்கள் எதிர்க்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்க்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துக் கொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது. இன்று உள்ள இக்கட்டான நிலைமை நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொவிட் நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்கள் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம். இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன்.