அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மிகவும் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் இந்த விழாவை நடத்தி கொண்டு இருக்கிறோம். 3,500 ஆண்டுகள் பழமையான இனம் தமிழ் இனம்.
புத்தகப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பதிப்பாளர்களும் பயனடையும் வகையில் அந்த பூங்கா அமையும். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்.
தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. ஆட்சியை தமிழ் ஆட்சியாக தமிழர்களின் ஆட்சியாக நடத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் என்று சொல்வது உங்கள் அனைவரையும் சேர்த்துதான் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். தமிழ் அமைப்புகளுக்கும், திங்களிதழ்கள் என மொத்தம் 21 விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக வழங்கப்படும் இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
இந்நிலையில், 2021-ம் ஆண்டிற்கான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருதுத் தொகையான 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடையும், 2021-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை முதலியன வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.