பொருளாதாரத்தை திட்டமிட்டு நிர்மூலமாக்கும் நிதியமைச்சர் அமெரிக்கா செல்லும்வரை போராட்டத்தில் ஈடுப்படுவோம் – உதயகம்மன்பில

183 0

பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக்கொள்ள எதிர்க்கட்சியினரை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. அசாங்கத்துடன் ஒன்றிணைய எதிர்தரப்பினர் இணக்கம் தெரிவிக்கவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்டு நிர்மூலமாக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லும்வரை போராட்டத்தில் ஈடுப்படுவோம். இனி வரும் காலங்களில் நாங்கள் சிறைக்கும் செல்லலாம் அல்லது மரணிக்கவும் நேரிடலாம். அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான நிதி முகாமைத்துவத்தினால் டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உயிருடன் இருந்திருந்தால் வலுசக்தி அமைச்சரை பதவி விலகுமாறு அறிக்கை வெளியிட்டிருப்பார் எனவும் குறிப்பிட்டார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வலுசக்தி அமைச்சராக பதவி வகித்த போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோனைகமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் வலுசக்தி அமைச்சர் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளமை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு முரணானது என வலியுறுத்தி என்னை அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிக்கை வெளியிட்டார்.

தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தற்போது உயிருடன் இருந்திருந்தால் இந்த விலையேற்றத்திற்கு எதிராக எவ்வாறு செயற்பட்டிருப்பார் என்று எண்ண தோன்றுகிறது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சு குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிநாட்டு கையிருப்பினை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யாத காரணத்தினாலும்,ரூபாவின் வீழ்ச்சி துரிதப்படுத்தப்பட்டதாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை நிலையற்ற தன்மையின் காணப்படுவதால் எரிபொருள் விலையை நிலையான தன்மையில் பேணுவதற்கான நிதியத்தை ஸ்தாபிக்க 2021.03.15 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தேன். இதற்கு நிதியமைச்சர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பிரதமர் தலைமையில் உபகுழு நியமிக்கப்பட்டது.

எரிபொருள் விலையினை நிலையாக பேணுவதற்கு பிரத்தியேக நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உபகுழு அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து அதனை செயற்படுத்த உரிய சட்ட ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிதியமைச்சர் அந்த யோசனையை செயற்படுத்துவதற்கும் தடையினை ஏற்படுத்தினார்.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து நிதியமைச்சு எரிபொருள் விநியோகத்தின் ஊடாக வரியினால் மாத்திரம் ஒரு நாளைக்கு 750 மில்லியன் வருமானத்தை ஈட்டிக்கொள்கிறது. டீசல் பற்றாக்குறை ஏற்படும் என நான் முன்கூட்டியே அறிவித்ததால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக பொது மக்கள் கூடியுள்ளார்கள்,எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என ஆளும் தரப்பினர் எனக்கு எதிராக கருத்துரைக்கிறார்கள்.

அவ்வாறாயின் எரிவாயு,மருந்து பொருட்கள், கோதுமை மா ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு எவ்வாறு ஏற்பட்டது.டொலர் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருள் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பினை முறையாக முகாமைத்துவம் செய்யாத காரணத்தினால் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது இயலாமையினை மறைத்துக்கொள்வதற்கு எம்மீது பழிசுமத்துகிறார்.

ஜனவரி 30 ஆம் திகதி முதல் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டாது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பொய்யான கருத்தினை நம்பியவர்கள் மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு பிறகு மின்விநியோகம் துண்டிக்கப்படமாட்ட மாட்டாது என்ற பொய்யினை கேட்டு ஆச்சரியமடைந்திருப்பார்கள்.எம்மை பதவி நீக்கி நாம் குறிப்பிட்ட யோசனைகளை அரசாங்கம் தற்போது செயற்படுகிறது.

நிதியமைச்சர் தேசிய பொருளாதாரத்தை வேண்டுமென்றே அதளபாதாளத்திற்கு கொண்டு செல்கிறார். பொருளாதார பாதிப்பு குறித்து நிதியமைச்சரிடம் கேள்வி கேட்கும் போது அதற்கு பதிலளிக்காமல் அவர் எம்மீது கோபமடைவார்.அரசாங்கத்திடம் கதைத்து பயனில்லை என்பதால் மக்கள் மத்தியில் அனைத்து பிரச்சினைகளையும் பகிரங்கப்படுத்தினோம்.

பெரும்பான்மை பலம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் எதிர்தரப்பினரை திருப்திப்படுத்தி தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சித்தது அந்த முயற்சியும் தற்போது தோல்வியடைந்துள்ளது. பலவீனமான அரசாங்கத்தில் எவ்வித பதவிகளையும் பொறுப்பேற்க போவதில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைக்க ஆரம்பித்ததை தொடர்ந்து அரசாங்கம் எம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. எதிர்வரும் காலங்களில் நாங்கள் சிறை செல்ல நேரிடும். எம்மை கொலை செய்யவும் கூடும். அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை. அலங்கோல அமெரிக்கரான நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும் வரை எமது போராட்டத்தை தொடர்வோம். செல்லாவிடின் நாங்கள் அனுப்பி வைப்போம் என்றார்.