நாட்டு மக்கள் மீண்டும் சுதந்திர கட்சி ஆட்சியைக் கோருகின்றனர் என்பதை அரசாங்கம் உணர வேண்டும் – மைத்திரிபால

152 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யும் சம்மேளனங்கள் அரசாங்கத்திற்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். எம்மால் ஏற்பாடு செய்யப்படும் சம்மேளனங்களில் காணப்படும் கூட்டத்தை அவதானித்த பின்னரேனும் நாட்டு மக்கள் மீண்டும் சுதந்திர கட்சி ஆட்சியைக் கோருகின்றனர் என்பதை அரசாங்கம் உணர வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மொனராகலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு தற்போது பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் உள்ளது. இந்த சவாலையும் எதிர்கொண்டு நாட்டையும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலையும் காணப்படுகிறது.

30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டுள்ள எமக்கு இந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எவ்வாறிருப்பினும் இதற்காக புதிதாக சிந்தித்து புதிதாக செயற்பட வேண்டியுள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு பொருளாதாரத்தைக் கொண்டிருந்த நாடாகும். 2019 இல் நான் தற்போதைய அரசாங்கத்திடம் ஆட்சியைக் கையளிக்கும் போதும் இதே நிலைமையே காணப்பட்டது.

ஆனால் இன்று அனைத்தும் சிதைந்து அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளன.

நாம் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதனுடன் இணையப் போவதுமில்லை. 2015 இல் நான் ஆட்சியைப் பொறுப்பேற்க்கும் போது சர்வதேச தொடர்புகள் பூச்சியமாகக் காணப்பட்டன.

எனினும் எனது ஆட்சியில் நான் அதனை கட்டியெழுப்பினேன். இன்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறினால் இலங்கைக்கு உதவுவதற்கு ஏனைய நாடுகள் தயாராகவே உள்ளன.

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளிலிருந்து மக்களை மீட்பதற்காகவே சர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு கோரினோம். அத்தோடு இது குறித்து பல்துறை நிபுணர்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றுடன் சுதந்திர கட்சியையும் மேம்படுத்தி மக்களாட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.

நாட்டு மக்கள் மீண்டும் சுதந்திர கட்சி ஆட்சியை கோருகின்றனர் என்பதை இப்போதாவது அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.