தனியார் பஸ் கட்டணம் , எரிபொருள் நிவாரணம் தொடர்பில் இன்று அமைச்சரவையில் யோசனை

143 0

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அல்லது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது குறித்து இன்று அமைச்சரவையில் யோசனை முன்வைக்கவுள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எரிபொருள்விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தை அதிகரிக்காமலிருப்பதற்கு இயலுமான அளவு முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு அகிய இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதையும்,முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையினையும் ஏற்றுக்கொள்கிறோம். கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக தனியார் பஸ் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் பஸ் கட்டணம் 20 சதவீதத்தினால் அதிகரிப்பட்டது. எரிபொருளின் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி பஸ் கட்டணம் 17 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்வரும்ஜுலை மாதம் வரை பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சு முன்வைத்த நிபந்தனைகளுக்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து பஸ் கட்டணம் 17 சதவீதத்தினால் அதிரகரிக்கப்பட்டது.

எரிபொருள் இறக்குமதியில் நெருக்கடி நிலவுகின்ற வேளையில் ஐ.ஓ.சி நிறுவனம் இவ்வருடத்தில் மாத்திரம் மூன்று முறை எரிபொருளின் விலையை அதிகரித்ததால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க நேர்ந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதால் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நெருக்கடியான சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரித்தால் பொது பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.

பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து இன்று அமைச்சரவையில் யோசனை முன்வைக்கவுள்ளேன். பஸ் கட்டணத்தை அதிகரிக்காமலிருக்க இயலுமான அளவு முயற்சிக்கிறோம்என்றார்.