புலிகளுக்கு வடக்கு, கிழக்கு கடற்பரப்பை வழங்க அன்றைய அரசாங்கம் முயற்சித்தது- சம்பிக்க ரணவக்க

260 0

தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு தற்போது மார்பில் அடித்து கொள்வோர் இதற்கு முன்னர் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்தவர்கள் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

சுனாமி ஏற்பட்ட நேரத்தில் வடக்கு, கிழக்கு கடற்பரப்பை விடுதலைப் புலிகளுக்கு வழங்க அன்றைய அரசாங்கம் முயற்சித்தது.

இப்போது தம்மை இன நேசர்கள் எனக் கூறிக்கொள்வோர் அப்போது பின்நோக்கி சென்று மறைத்து கொண்ட நேரத்தில் உயிர் தியாகத்துடன் மஹாமலுவவில் உண்ணாவிரதம் இருந்து மாநாயக்க தேரர்களை அழைத்து திட்டத்தை ஓமல்பே சோபித தேரரே தடுத்து நிறுத்தினார்.

அப்படி நடந்திருந்தால், பின்னர் எம்மால் பயங்கரவாத பிடியில் இருந்து வடக்கு, கிழக்கை மீட்டிருக்க முடியாது போயிருக்கும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், அந்த பிரதேசத்தில் எந்தளவுக்கு விடுதலைப் புலிகள் கடற்படை பலத்தை எந்தளவுக்கு கட்டியெழுப்பியிருந்தனர் என்பதை நாம் கண்டோம்.

உத்தியோகபூர்வமாக பிரதேசத்தை கையளித்திருந்தால், நாட்டிற்கு எந்தளவு பெரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என்பது தெளிவானது. எமது பௌத்த பிக்குமாரே அதனை தடுத்து நிறுத்தினர்.

அதேபோல் தற்போது புதிய அரசியலமைப்புச் சட்டம் பற்றி பலர் பேசுகின்றனர். எனினும் அப்படியான அரசியலமைப்புச் சட்டம் வரைவு இன்னும் வரையப்படவில்லை.

சங்க நாயக்கர்களின் இணக்கம் இன்றி அப்படியான அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது.

1995ம் ஆண்டுகளில் அப்படி இருக்கவில்லை. தற்போது தம்மை தேசப்பற்றாளர்கள் என மார்பில் அடித்துக் கொள்ளும் அனைவரும் இணைந்து நாட்டை பிரிக்கும் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தனர்.

அந்த அரசியலமைப்புச் சட்டத்தை வரைய மகிந்த ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ், சரத் என் சில்வா போன்றோர் பங்களிப்பை வழங்கினர்.

இவர்கள் அனைவரும் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை சந்திரிக்கா அம்மையாருக்கு வரைந்து கொடுத்தவர்கள்.

ஹெடிகல்லே விமலசார தேரர் தியாகத்துடன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாகவே அந்த அரசியலமைப்புச் சட்டம் தோல்வியடைய காரணமாக அமைந்தது.

அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லாமல் இருந்த எமக்கு அதனை தோற்கடிக்க முடிந்தது.

உண்மையான பலத்திற்கு என்றும் உயிருள்ளது என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.