ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்கப்போகும் விடயங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடித் தீர்மானிக்கவுள்ளோம் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) ஜனாதிபதி கோட்டாபய அழைத்தவுடன் உடனடியாகச் சென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செல்லக்கூடாது எனவும் நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே சந்திப்பினை மேற்கொள்ள வேண்டும் என்றும், இல்லாதுவிட்டால் கூட்டமைப்பினை அரசாங்கம் பகடைக்காயாக பயன்படுத்தி விடும் என்றும் கடிதம் மூலம் சம்பந்தனுக்கு அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த விடயம் சம்பந்தமாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுடனும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இந்நிலையில், கருத்து வெளியிட்டுள்ள மாவை.சோனதிராஜா, ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்திப்பதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளோம்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 3.30 இற்கு ஜனாதிபதி எம்மைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றையதினம் காலையில் குறித்த சந்திப்பினைச் மேற்கொள்ளவுள்ளோம்.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய எம்மைச் சந்திப்பதற்கு முன்பொரு சந்தர்ப்பத்தில் நேர ஒதுக்கீட்டை வழங்கிவிட்டு இறுதி நேரத்தில் அச்சந்திப்பினை இரத்துச் செய்திருந்தார். அதன் பின்னர் அவர் சிங்கள, பௌத்த நிலைப்பாட்டிலேயே உறுதியாக நின்றார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான நிபுணர்கள் குழுவிடம் எமது பரிந்துரைகளை வழங்கிய பின்னரும் கூட அவர் ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டையே அமுலாக்குவதற்கு விளைந்து கொண்டுள்ளார்.
இதனைவிடவும், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அவர் மௌனமாகவே இருப்பதோடு பயங்கரவாத தடைச்சடத்தினை முழுமையாக நீக்குவதையும் விரும்பவில்லை. இவற்றை விடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறலை செய்வதற்கும் தயராக இல்லை.
இந்நிலையில் எம்மை அழைத்து என்ன விடயங்களைப் பேசப்போகின்றார் என்ற கேள்விகள் எமக்குள் இல்லாமில்லை. அதேநேரம்ரூபவ் அவர் என்ன விடயங்களைப் பேசினாலும் நாம் மேற்படி விடயங்கள் உட்பட எமது மக்கள் அன்றாடம் முகங்கொடுத்து வரும் காணாமலாக்கப்பட்டவாகள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் தொடர்பில் எடுத்துரைத்து தீர்வுகளை வழங்குமாறே வலியுறுத்தவுள்ளோம். அதற்கான நிகழ்ச்சி நிரலை நாம் எமது சந்திப்பின்போது தாயரிக்கவுள்ளோம் என்றார்.