கொள்கைப்பற்றுடைய எம்மை யாரும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்த முடியாது!

189 0

கொள்கைப்பற்றுடைய எம்மை யாரும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்த முடியாது என்று வீரகேசரிக்கு தெரிவித்த சம்பந்தன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதை இலக்காக கொண்டே பேச்சுக்களை முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுக்கான கதவுகள் திறக்கப்படுகின்றபோது அச்சந்தர்ப்பத்தினை கைவிட்டு விடமுடியாது என்று குறிப்பிட்ட அவர், புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை அழுத்தமாக வலியுறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 3.30 இற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருகை தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு அவசரப்பட்டு செல்லத் தேவையில்லையென்றும், தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள உள்ளுர்ரூபவ் சர்வதேச நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதுள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு கடிதமொன்றை சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் குறித்த விடயங்கள் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளார் என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு, ரெலோவின் கடிதம் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. அதனை படித்தேன். அவர் ஜனாதிபதியுடன் பேசுவது தவறு என்று கூறவில்லை.

ஆனால் அந்த பேச்சுக்கான அழைப்பு பற்றி அவர்களது தரப்பிற்குள்ள சந்தேகங்கள் குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அந்த விடயங்கள் தொடர்பாக நான், செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடியுள்ளேன்

மேலும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. ஆகவே அக்கடிதம் பற்றி வேறெந்த கருத்துக்களையும் கூறுவதற்கு நான் விரும்பவில்லை.

பேச்சுக்கான அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பினை விடுத்துள்ளார். இதில் பங்கேற்பதாகவே நாம் தீர்மானித்துள்ளோம். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் நடைபெறுகின்ற முதலாவது பேச்சுவார்த்தையாக இது அமையப்போகின்றது. இதில் என்னென்ன விடயங்கள் பேசப்படப்போகின்றன என்பது பற்றி ஜனாதிபதி தரப்பிலிருந்து எதுவும் கூறப்படவில்லை.

எவ்வாறானினும், எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்விதமான சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எமது முயற்சிகளை நம்பிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும்.

பங்கேற்பது தவறில்லை

எமது விடயங்களை நாம் இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம். இலங்கைக்கு வருகை தருகின்ற சர்வதேச தரப்பினருக்கும் எடுத்துரைத்துள்ளோம். அவ்வாறானதொரு சூழலில் நாம் ஜனாதிபதி கோட்டாபய விடுத்த அழைப்புக்கு அமைவாக பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் தவறில்லை.

எமது கொள்கையில் நாம் பற்றுறுதியாக இருந்துகொண்டிருக்கின்றோம். ஆகவே எம்மை யாரும் பயன்படுத்தி விடமுடியாது. அவ்வா பயன்படுத்துவதற்கும் இடமளிக்க முடியாது. ஆகவே அவ்விதமான கிலேச்சங்கள் அவசியமற்றவை.

பேசப்போகும் விடயங்கள்

இதேநேரம், ஜனாதிபதியுடனான பேச்சானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதையே இலக்காக கொண்டதாக அமையவுள்ளது. அதேநேரம், உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பானது, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை தருவதாகவும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்.

<p>மேலும், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பொறுப்புக்கூறப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை ஆணித்தனமாக வலியுறுத்தவுள்ளதோடு, வடக்கு, கிழக்கில் பூர்வீக வாழிடங்களாக கொண்ட எமது மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றுக்கான நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளை கோரவுள்ளோம் என்றார்.