கோவையில் ஒட்டகப்பாலில் டீ விற்கும் தேநீர்கடை

175 0

வடிவேலு காமெடிக்காக பயன்படுத்திய அந்த ஒட்டகப்பால் வார்த்தையை மெய்பிக்கும் வகையில் தற்போது கோவையில் ஒரு தேநீர் கடையில் ஒட்டகப்பாலில் டீ விற்பனை நடந்து வருகிறது.

கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த வெற்றிக்கொடி கட்டு என்ற திரைப்படத்தில் ஒரு காமெடி இடம் பெற்றிருக்கும்.
அந்த காமெடியில் டீக்கடைக்கு டீ குடிக்க செல்லும் வடிவேலு, கடையில் உள்ள டீ மாஸ்டரிடம், எத்தனை வருடமா மாட்டு பாலிலேயே டீ போடுவீங்க. எனக்கு ஒரு ஒட்டகப்பாலில் டீ போட்டு தா என்று கேட்கும் நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருக்கும். வடிவேலு காமெடிக்காக பயன்படுத்திய அந்த ஒட்டகப்பால் வார்த்தையை மெய்பிக்கும் வகையில் தற்போது கோவையில் ஒரு தேநீர் கடையில் ஒட்டகப்பாலில் டீ விற்பனை நடந்து வருகிறது.
கோவை சூலூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நீலாம்பூர் புறவழிச்சாலையில் ஒட்டக பண்ணை நடத்தி வருகிறார். அங்கு ஒட்டகபாலில் இருந்து கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்கிறார். பண்ணை அருகே சிறிய அளவில் தேநீர் கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
மேலும் புது முயற்சியாக தனது டீக்கடையில் காலை, மாலை வேளைகளில் ஒட்டகத்தில் இருந்து பால் கறக்கபட்டு நேரடியாக டீ போட்டு விற்பனை செய்து வருகிறார். இதுதவிர ஒட்டகப்பாலில் இருந்து லெசி, ஐஸ்கிரீம், உள்ளிட்ட பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது அந்த பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து பண்ணை உரிமையாளர் மணிகண்டன் கூறியதாவது:-
ஒட்டகப்பாலை கொண்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் இருந்து 6 ஒட்டகங்களை கொண்டு வந்தேன்.
பழைமையான உணவு பழக்க வழக்கங்களுக்கு மக்கள் மாற வேண்டும். இயற்கையை நோக்கி மக்கள் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் இதை செய்து வருகிறேன். அதிகாரி, கால்நடை டாக்டர்கள் உள்ளிட்டோரின் அனுமதி பெற்று வளர்த்து வருகிறேன்.
எல்லா சூழலிலும் வாழக்கூடிய வகையில் ஒட்டகங்கள் இருப்பதால் இங்கு சிரமமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இயற்கையை சார்ந்து வாழ இதை பார்த்து பழகி கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் ஓட்டகபால் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒட்டகம் மற்றும் குதிரை சவாரி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.