173 0
காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான குறித்த நபர் நேற்று (11) காலை ஹொரணைக்கு வந்து தனது காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை கொள்வனவு செய்வதற்காக கடையொன்றிற்கு சென்றுள்ளார்.

குறித்த இளைஞரிடம் 20 ஜோடி தங்கக் காதணிகள் அடங்கிய நகைப்பெட்டியை கடையின் உரிமையாளர் காட்டிய நிலையில் திடீரென அதனை எடுத்துக் கொண்டு குறித்த இளைஞன் தப்பி ஓடியுள்ளார்.

குறித்த இளைஞன் ஹொரணை நகரின் ஊடாக தப்பியோடிய போது அருகில் இருந்த மற்றுமொரு இளைஞர் குழு அவரை துரத்திச் சென்று பிடித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சந்தேக நபர் ஏற்கனவே பிடிக்கப்பட்டு மண்டியிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் எடுத்துச் சென்ற நகைப் பெட்டியில் 500,000 ரூபா பெறுமதியான 20 ஜோடி காதணிகள் இருந்துள்ளன.

எவ்வாறாயினும், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, ​​இரண்டு ஜோடி காதணிகள் அதில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஓடும் போது காதணிகள் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, ​​ராஜகிரியவில் உள்ள தனது காதலிக்கு பரிசாக காதணி ஒன்றை கொள்வனவு செய்ய கடைக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.

எனினும் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சந்தேகநபர் இவ்வாறு கூறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபருக்கு எதிராக கொள்ளைச் சம்பவங்கள் அல்லது திருட்டுச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கஞ்சா வைத்திருந்தமை தொடர்பில் பாதுக்க பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.