சர்வதேச அளவில் ரஷிய நிதியுதவி பெற்ற எந்தெந்த சேனல்கள் தடுக்கப் பட்டுள்ளன என்பதை வெளியிட யூடியூப் மறுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 17-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வருகின்றன.
அந்த வகையில், ரஷிய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் செய்தி ஊடகங்களை சர்வதேச அளவில் யூடியூப் நிறுவனம் முடக்கி உள்ளது.
இதன் மூலம் ரஷியாவின் செய்தி ஊடகங்கள் இனி யூடியூப் பக்கங்களில் இடம் பெறாது. இது ஆர்டி, ஸ்புட்னிக், டாஸ் உள்ளிட்ட பல ரஷிய செய்தி நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இப்போது வன்முறை நிகழ்வுகளின் கொள்கையின் கீழ் வந்துள்ளதாகவும், அதன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஷாத் ஷாட்லூ தெரிவித்துள்ளார்.
எனினும் சர்வதேச அளவில் எந்தெந்த சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், அவை எப்போது நீக்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளது.