ரணில் நல்ல நண்பர், ஆனால் அவருக்கு பிரதமர் பதவி இல்லை! – மகிந்த ராஜபக்ச

173 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு மத்தியில், பிரதமர் மகிந்த ராஜபக்ச அதனை மறுத்துள்ளார்.

அலரிமாளிகையில் மூத்த ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பில் பிரதமர் ராஜபக்ச, விக்கிரமசிங்கவும் தானும் மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தபோதும் அவர்களது கொள்கைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் வேறுபட்டிருப்பதாக கூட்டு அரசாங்கத்தில் இணைந்து செயற்பட முடியாது எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவைப் பாராட்டிய ராஜபக்ச, தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு தேசிய அரசாங்கம் குறித்து எந்த அரசியல் கட்சிகளுடனும் விவாதிக்கப்படவில்லை என்றும் அரசாங்கம் அனைத்து பிரச்சினைகளையும் விரைவில் தீர்க்கும் என்றும் கூறினார்.

இதேவேளை, தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அனைத்து அரசியல் கட்சிகளின் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் மார்ச் 23 இரவு 10 மணிக்கு சந்திக்கும் சர்வகட்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.