பெண் பிள்ளை பிறந்துவிட்டதே என நினைத்த காலகட்டம் இப்போது கிடையாது. அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து வருகிறோம் என்று ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ். கூறினார்.
இன்று பார்த்தோமானால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இன்னும் பல துறைகளில் பெண்கள் படித்து நன்றாக முன்னேறியுள்ளார்கள். அதனால் பெண்களுக்கு கல்வி என்பது மிக மிக முக்கியம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு கருத்தாகும்.
ஆண்களை அதிகமாக படிக்க வைத்தால் அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என ஒரு காலத்தில் பெற்றோருக்கு எண்ணங்கள் இருந்தன. ஆனால் அவை எல்லாம் தற்போது தகர்ந்துபோய் விட்டன. பெண்கள் நன்கு படித்து அவர்களது பெற்றோரை காப்பாற்றும் நிகழ்வுகளை நம்மைச் சுற்றி பார்க்கிறோம்.
எனவே பெண்களுக்கு கல்வி என்பது மிக முக்கியம். ஒரு பெண்ணுக்கு கல்வி என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கே கல்வி. அந்த கல்வியால் அவளது குழந்தைக்கு நல்ல அறிவைப் பெருக்க முடியும். பொருளாதாரத்தை பெருக்க முடியும்.
நன்கு படித்தவர்கள் சிலர் நான் வேலைக்கு போகவில்லை என்பார்கள். இதனால் அவள் படித்த கல்வியால் அவளுக்கோ, சமுதாயத்துக்கோ பயன் கிடைக்காமல் போய்விடும்.
நிச்சயம் நல்லா படிக்கணும், அவர்களால் இயன்றவரை என்னென்ன நிலைகளுக்கு வரமுடியுமோ வரவேண்டும். அரசு வேலை மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் சாதிக்கலாம்.
சம்பாத்தியம் என்பது ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும். எனவே, நல்லா சம்பாத்தியம் செய்யவேண்டும், நேர்மையோடு நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பதே இன்றைய தினத்தின் எனது சிறப்பு செய்தியாகும்.
* பெண்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள், தயங்குகிறார்கள். இந்த சூழ்நிலையில் நீங்க எவ்வளவோ இன்னல்கள், தடுமாற்றம், மிரட்டல்களை தாண்டி வந்துள்ளீர்கள். எந்த மாதிரியான கஷ்டங்களைக் கடந்து வந்துள்ளீர்கள் என்பது குறித்து?
அப்பா கல்லூரி பிரின்சிபல், அம்மா டீச்சர். சிறுவயது முதலே அவர்கள் கல்வியின் பெருமையை சொல்லி சொல்லி வளர்த்தார்கள். வகுப்பில் முதல் மாணவி, பி ஏ, எம்.ஏ.வில் பல்கலைக்கழகத்தில் ரேங்க். ஆடல், பாடல் என எல்லாவற்றிலும் முன் நிற்கிறது. மேடைப் பேச்சு… அந்த மாதிரி சிறு வயது முதலே அனைத்திலும் பயிற்சி கொடுத்து வந்தனர்.
நிச்சயமா போட்டித் தேர்வு மூலம்தான் அரசு பணி கிடைக்கும் என்பதை என் மனதில் பதியவைத்தனர். எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகி, போட்டித் தேர்வு எழுதி டெபுடி கலெக்டராக ஆனேன். இன்றைக்கு நான் அரசு செயலாளராக இருந்து வருகிறேன்.
நாம் ஒரு பணியை செய்யும்போது அது 90 சதவீதம் பேருக்கு சரியாக இருக்கும். மீதி 10 சதவீதம் பேருக்கு அது ஏற்புடையதாக இருக்காது.
நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றினேன். அது மணல் கடத்தல், அரிசி கடத்தல் காலகட்டம். இத்தகையோருக்கு நான் எடுக்கும் நடவடிக்கை அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது.
நானும் பணியாற்றாமல் இருக்கமுடியாது. அப்போது ஒரு சில மிரட்டல்கள் வந்திருக்கு. மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்தால் நம்மால் வேலை பார்க்க முடியாது. பெண் என்பதாலேயே என்னை மிரட்ட முடியாது.
என்னை அதிகாரியாகப் பாருங்கள் என்பேன். பெண் அதிகாரியாக பார்க்காதீர்கள் என்பேன்.
நாம் அதே படிப்பு, அதே பணி, அதே சம்பளம் வாங்குகிறோம். ஆனாலும் நம்மீது ஏன் பெண் என்ற முத்திரை விழுகிறது. அந்த மாதிரி இருக்கக்கூடாது. பெண் என்பதாலேயே மிரட்டுவதற்கு என்னை நான் ஆட்படுத்துவது கிடையாது.
இந்த இடத்துக்கு பர்டிகுலரா வந்தா ஆசிட் வீசுவோம் என மிரட்டுவார்கள். ஆனால் நான் அங்கு தொடர்ந்து செல்வேன். மிரட்டலுக்கு பயந்தா வேலையே பார்க்க முடியாது. அந்த பணியில் கடுமையானவர்களை சந்திக்க வேண்டி வரும் என தெரிந்துதான் வந்துள்ளோம்.
நேர்மையை கைக்கொண்டு, தைரியத்தை இந்தப் பக்கம் வைத்துக் கொண்டு பணியாற்றினால் நாம் எந்த துறையிலும் சாதிக்கலாம்.
* உங்கள் பெற்றோர் பற்றிக் கூறுங்கள், அவர்கள் உங்களுக்கு ஆதரவு அளித்தது குறித்து சொல்லுங்கள்?
பெண் பிள்ளை பிறந்துவிட்டதே என நினைத்த காலகட்டம் இப்போது கிடையாது. அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து வருகிறோம்.
ஆண் பிள்ளைகள் தான் நம்மைக் காப்பாற்றும், ஆண் பிள்ளைகள் தான் கொள்ளி வைக்கவேண்டும் என சில சோஷியல் முரண்பாடுகள் இருக்கின்றன. அதெல்லாம் இப்போது உடைந்து கொண்டு வருகிறது. இப்போது சில பெண் குழந்தைகளும் பெற்றோரை பார்த்து வருகின்றனர்.
எனது பெற்றோர் எனக்கு அதிகமான வாய்ப்பை வழங்கினார்கள். அதனால் தான் என்னால் இந்த உயரத்துக்கு வரமுடிந்தது. ஆண் என்றால் உயர்ந்தவன், பெண் என்றால் தாழ்ந்தவள் என்ற வார்த்தைகள் என் காதில் விழுந்ததே கிடையாது.
ஆணுக்கு என்ன வாய்ப்போ, அதைவிட அதிகமான வாய்ப்பை எனது பெற்றோர் எனக்கு கொடுத்தனர். எவ்வளவு வேண்டுமானாலும் படி என ஊக்குவிப்பார். எப்போதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பார் அப்பா.
கல்வியோடு ஒவ்வொரு நாளும் நாம் அறிவைப் பெருக்கி கொண்டுவர வேண்டும். பேப்பர் படிக்கனும், செய்திகளை தெரிஞ்சுக்கனும், அப்போதுதான் சான்றோர் இருக்கும் அவையில் நாம் சமமாக பேசமுடியும்.
ஒவ்வொரு நாளும் புது புது செய்திகளை தெரிந்து கொண்டு நாம் நம்மை அப்டேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். எனது அப்பாவும் அம்மாவும் எனக்கு அந்த பயிற்சியைக் கொடுத்து வந்தார்கள்.
கல்வி என்பதும், ஞானம் என்பதும் பெண்களுக்கு மிக மிக முக்கியம் என்பதை செய்தியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
* பாலியல் பலாத்காரம் குறித்து பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல அச்சப்படுகிறார்களே, அது குறித்து?
இந்த விஷயத்தை இரு வகையாக பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஒன்று, பாலியல் பலாத்காரம். இரண்டு, பெண்கள் இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்.
ஆண் குழந்தைகளை பெண் குழந்தைகள் மீது மரியாதை கொடுக்கும்படி வளர்க்க வேண்டும். இதில் பெண்களின் பங்கு நிறைய உள்ளது என நினைக்கிறேன். ஆணை நீ உயர்வானவன் என்ற எண்ணத்தைக் கொடுத்து வளர்ப்பதன் மூலம் அவன் பெண்மீது தன்னுடைய உடல் வலுவை காட்டுவது மாதிரியான எண்ணத்தோடு வளர்கிறான். இது எல்லா இடத்திலும் நடப்பதில்லை. ஒரு சில குழந்தைகள் தப்புகின்றன. அந்தக் குழந்தைகள் பெரிய ஆளாகும்போது பெண்கள் மீது அந்த மதிப்பீடு குறைந்து பெண்ணை தனது பலத்தால் ஆளலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் செல்கிறார்கள். சின்ன வயதிலேயே அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் இது மாதிரியான விஷயங்களை நாம் தவிர்க்கலாம் என்பது ஒரு பக்கம்.
இரண்டாவது, அந்த மாதிரியான சூழ்நிலையில் ஒரு பெண் குழந்தை மாட்டிக் கொள்கிறாள். அதை எப்படி வெளியே சொல்வது? வெளியே சொன்னால் அசிங்கம்னு நினைக்கிறாங்க. பெண் மேலே எந்த விதமான குறையும் கிடையாது. குற்றமும் கிடையாது. அந்த சந்தர்ப்பத்திலே மாட்டிக் கொள்வதன்மூலம் அந்த பெண்ணுக்கு இது நிகழ்கிறது.
இது மாதிரியான விஷயங்கள் வேறு ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது என எண்ண வேண்டும். மேலும், சட்டத்தில் நிறைய பாதுகாப்பு உள்ளது. நம் சமூகத்தின்மீது நம்பிக்கை வைத்து நடந்த சம்பவங்களை வெளியே சொல்ல வந்தால்தான் அந்த சம்பவங்கள் மீண்டும் நடக்காம பார்த்துக் கொள்ளலாம்.
* நீங்கள் பாரதியாரின் ரசிகை என கேள்விப்பட்டோம். பாரதியின் பாடல்கள் அல்லது கவிதைகள் குறித்து கூறுங்களேன்?
பாரதியார், நான் பிறந்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம். அதே தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்து இன்று உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மகா கவி.
எனக்கு ஆறு வயதாகும்போது, விடுமுறை நாட்களில் அப்பா என்னை அழைத்து பாரதியார் கவிதைகளில் சில வரிகளை குறித்துக் கொடுப்பார். இதை மாலைக்குள் ஒப்புவித்தால் அவர்களுக்கு 5 காசு தருவேன் என சொல்லுவார்கள். அந்த 5 பைசாவை மிக அதிகமாக எனது அப்பாவிடம் இருந்து நான்தான் வாங்கினேன்.
தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, வாடி துன்பம் மிக உழன்று, பிறர் வாட பல செயல்கள் செய்து, நரைகூடி கிழப்பருவம் எய்தி, வெறும் கூற்றுக்கு இரை என பின் மாயும், வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ பராசக்தி என பாடுவார்.
இதை ஆறாவது வயதில் நான் படித்தேன். ஆனால் இப்பொழுதும் என்னால் சொல்ல முடியும்.
எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம் போன்ற பல பாரதி பாடல்களை அப்பா சொன்னது போல் படித்தேன். சொன்னால் போய்க் கொண்டே இருக்கும். அது ஞாபக சக்தியையும் பெருக்கியது. ஒரு தைரியத்தையும் கொடுத்தது.
நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, நானிலத்தில் யார்க்கும் அஞ்சாத செருக்கு என அதெல்லாம் வருவதற்கு இந்தப் பாடல்கள் மிக உறுதுணையாக இருந்தன. அப்பாவுக்கு நன்றி, அம்மாவுக்கு நன்றி, பாரதிக்கும் நன்றி.
* ஐ.ஏ.எஸ். துறைக்கு வருவதற்கான எண்ணம் எப்படி வந்தது? நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதை சொன்னால் பெண்கள் பலருக்கு ஊக்கமாக இருக்கும் அல்லவா?
எனது அப்பா கல்லூரி பேராசியர். அம்மா டீச்சர். நான் எம்.ஏ. வரலாறு படித்தேன். அப்பா வரலாற்று பேராசிரியர். எம்.ஏ. ரிசல்ட் வரும் முன் அதே கல்லூரியில் என்னை கூப்பிட்டு வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். மாணவி போலவே நான் கல்லூரி சென்று வந்தேன்.
இதைக் கண்ட எனது அப்பா, நீ அதிகாரியாக வரவேண்டும் எனக்கூறினார். அன்று முதல் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எழுதினேன். ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் அப்பா என்னை கைப்பிடித்து கூட்டிச்சென்று எழுதவைப்பது வழக்கம்.
குரூப் 4, குரூப் 2, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பாஸ் செய்துள்ளேன். குரூப் 1 பாஸ் பண்ணேன். இத்தனை பணிகளும் எனக்கு இருந்தது. நான் எடுத்துக்கொண்ட பணி டெபுடி கலெக்டர். அப்புறம் ஆர்டிஓவாக வேலை பார்த்தேன். டிஆர்ஓ, அப்புறம் ஐ.ஏ.எஸ். வந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கலெக்டராக இருந்தேன்.
கன்னியாகுமரி கலெக்டராக இருந்தபோது தமிழக முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் எனக்கு வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது கொடுத்தார்கள். தங்கப்பதக்கம், சான்றிதழ், 5 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகை. அந்த விருதை வாங்கும்போது எனது அப்பா அம்மாவுக்கு நான் பெரிய பெருமை சேர்த்ததாய் உணர்ந்தேன். நானும் சந்தோஷப்பட்டேன், அப்பா, அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள். அந்த வகையில எனது வளர்ச்சிக்கு அப்பா, அம்மா உறுதுணையாக இருந்தார்கள்.
* தாங்கள் எழுதியுள்ள புத்தகங்கள் குறித்து கூறுங்களேன்?
கல்லூரி நாட்களில் கட்டுரை, கவிதை எழுதியுள்ளேன். 2017-ல் தினமணி மகளிர் மணியில் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அது ‘பெண்மை ஒரு வரம்’ என்ற நூலாக வெளிவந்துள்ளது.
பெண் உடலில் இயற்கை வைக்கும் வலிமை பின்னம்…நேர்மையின் சக்தியால் நிரவல் பெறுகிறது என்பதே இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.
மேலும் சிறுகதைகள் தொகுப்பு ஒன்றும் விரைவில் வெளிவர உள்ளது. இன்னும் தொடர்ந்து எழுத ஆசை, நிறைய எழுதலாம் என இருக்கிறேன்.
* மாலைமலர் வாசகர்களுக்கு மகளிர் தினத்துக்காக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினம் கொண்டாடுவதற்கு ஒரு குரல், எல்லோரும் சேர்ந்து ஒருமித்த குரலாக கூறுவது உண்டு.
அதுபோல் 2022-ம் ஆண்டின் ஒட்டுமொத்த குரல் என்னவென்றால் ‘பிரேக் த பயாஸ்’. ஆண்களுக்கான சார்பை தகர்ப்போம் என்பதே.
தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் இந்த சார்பு நிலை உணரப்படுகிறது. அந்த ஒரு சார்பை பிரேக் பண்ணணும். கோடு நேர்கோடாக இருக்கவேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் குரலாக உள்ளது. அதையே நாமும் எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஆண் குழந்தை, பெண் குழந்தைகளை சமமாக நினைக்கும் போக்கு வளரவேண்டும். எண்ணத்தில் அப்படி வளர்த்தால் நிச்சயம் இருவரும் சமனிலையில் போகும் எதிர்காலம் நிச்சயமாக காத்திருக்கிறது.