ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுமா?- அமெரிக்கா விளக்கம்

161 0

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த மாதம் 24-ந்தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. நேற்று 12-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், பொதுமக்கள் வெளியேறும் வகையில் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்தது.
முதல் நாளில் இருந்தே உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தக் கூடாது என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின. ஆனால், ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் அந்நாட்டின் மீது பல்வேறு தடைகளை விதித்தன. ரஷியாவின் முக்கியமான வங்கிகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களும் ரஷியாவிற்கான தங்களுடைய சேவைகளை நிறுத்தின.
உக்ரைன்  மீது போர் தொடுத்தால் தடைகள் விதிக்கப்படும் என்பதை ரஷியா முன்பே அறிந்திருந்ததால், தடைகள் குறித்து கவலைப்படவில்லை. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் எரிபொருட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரஷியாவில் இருந்து அதிக அளவில் கக்சா எண்ணெய், கியாஸ் ஐரோப்பிய நாடுகள் உள்பட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுடனும், உலகின் பல்வேறு நட்பு நாடுகளுடனும் தனிப்பட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டால், ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்படும்.