உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வழங்க வேண்டும் என கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கார்டினல் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ளபோதிலும் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி எமக்கு தெரியவில்லை. நாங்கள் இன்னும் இருளில் இருக்கிறோம். இத்தாக்குதல் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்களை சேகரிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க அரசாங்கம் தவறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சில இஸ்லாமிய இளைஞர்களே இத்தாக்குதலுக்குக் காரணம் என நாம் ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும், இத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாமென தற்போது நாம் சந்தேகிக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.