மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு

249 0

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்மானம், கட்சியின்​ தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான விசேட சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

“தற்போதை அரசியல் பிரச்சினைக்கு மத்தியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்ன?” என இந்தக் கூட்டத்தின் போது மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், “அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இது சரியான தருணம் அல்ல, சரியான சந்தர்ப்பத்தில் விலகுவோம்” என மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நாளை (08) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.