நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 20 வயதான இளைஞன் உட்பட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார்
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மன்னார் – தாராபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 கிலோ 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்றையதினம் அவர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸ
கல்கிஸ்ஸ – இரத்மலானை பகுதியில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 48 வயதான நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய முற்பட்டபொழுது கண்ணாடி துண்டொன்றின் மூலம் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அதை தடுக்கச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தரொருவர் காயமடைந்து களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் எவ்விடத்தைச் சேர்ந்தவரென்பது தெரியப்படாத நிலையில் கல்கிஸ்ஸ பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹோமாகம
ஹோமாகமை பிரதேசத்தில் 15 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான சந்தேக நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாளிகாவத்தை
மாளிகாவத்தை மற்றும் பபாபுள்ளை பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் 38 வயதான மாளிகாரவத்தை மற்றும் கொழும்பு 15 பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அங்குலானை
அங்குலானை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று வௌ;வேறு சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்குலானை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சயுரபுர குடியிருப்புக்குட்பட்ட பிரதேசத்தில் 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அதேபகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவராவார். இதேவேளை குறித்தநபர் மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 18 ம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அடுத்ததாக மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு அருகில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 20 வயதான இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.
அங்குலானை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிளைப்பில் சமுத்ராசன்ன பிரதேசத்தில் 5கிராம் 200மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேபகுதியைச் சேர்ந்த 27 சந்தேகநபரொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அங்குலானை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.