முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தூத்துக்குடி வருகை

188 0

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைெறும் விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயரம் உள்ள முழு உருவசிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியை பெருக்கும் வண்ணம் ரூ.1,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் புதிய பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுகிறது.

இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

இதற்காக முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் தூத்துக்குடி எல்லையான பந்தல்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து கார் மூலமாக இரவு 8 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.

மாவட்ட எல்லையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் மற்றும் எம்.எல்.ஏ.க் கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் தூத்துக்குடிக்கு வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

பின்னர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைெறும் விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயரம் உள்ள முழு உருவசிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து சிலையின் முன்பு 22 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார். மேலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 300 பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.

பின்னர் கலைஞர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோர் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர்.

பின்னர் அவர்களிடம் முதல்-அமைச்சர் சிறிது நேரம் பேசுகிறார். இதனை முடித்துக்கொண்டு இரவில் சத்யா ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.

நாளை காலை 9 மணிக்கு ஸ்பிக் நிறுவனத்தில் 22 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் 10 மணிக்கு தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடக்கும் விழாவில் ரூ.1,000 கோடியில் முதல்-அமைச்சர் உலகத்தரம் வாய்ந்த பர்னிச்சர் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

அதனை முடித்துக்கொண்டு மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வாறுகால் பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் தூத்துக்குடி பயணத்தால் தி.மு.க.வினர் உற்சாக மடைந்துள்ளனர்.

நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார் தலைமையில் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி. திருநாவுக்கரசு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.