வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

172 0

சுற்றுலா பயணிகள் வருகையால் கொடைக்கானலில் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோசனம் நிலவி வருவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மலைத்தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானலில் பகல் பொழுதில் வெயில் அடித்த போதும் இதமான தென்றல் காற்று மேனியை தழுவிச் செல்கின்றது.

இதனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.

மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியல் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். கோடைகாலம் தொடங்கியுள்ளதையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க பல்வேறு மலர்ச் செடிகள் நடப்பட்டுள்ளன. இதில் பூக்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பூத்துக்குலுங்கும்.

மேலும் உலகத் தலைவர்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றின் ஓவியங்களை மலர்களால் வரைந்து சுற்றுலா பயணிகளை கவர மலர் கண்காட்சியில் வைப்பது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்க்கண்காட்சி நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.