இன பாகுபாடு காட்டப்படுகிறது- கொடைக்கானல் திரும்பிய மாணவி பேட்டி

190 0

உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய மாணவ-மாணவிகளிடையே இன பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உக்ரைன்- ரஷியா இடையே போர் சூழல் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மாணவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்க சென்ற மாணவர்கள், வேலை நிமித்தமாக சென்றவர்களை அருகில் உள்ள நாடுகளுக்கு வரவழைத்து விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதில் மாணவ-மாணவிகளுக்கு இடையே இன பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொடைக்கானலை சேர்ந்த மருத்துவ மாணவி அனுசியா மோகன் நேற்று நாடு திரும்பினார். அவர் கூறுகையில், அவரச கால கட்டத்தில் இந்திய அதிகாரிகள் வழங்கிய 10 எண்களும் செயல்படவில்லை.

இதனால் கடும் அவதிக்குள்ளானோம். மேலும் வடமாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் இருந்ததால் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

போர் பதட்டத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடந்த சில நாட்களாக போராடினோம். தற்போது ஊர் திரும்பிய பின்னரே நிம்மதி அடைந்துள்ளோம். அங்கு தவித்து வரும் மற்ற மாணவர்களையும் விரைவில் மீட்க வேண்டும் என்றார்.