தமிழகத்தில் சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட உத்தரவு

193 0

சனிக்கிழமைகளில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பதிவுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும். கடன்பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர். தொழில் முனைவோரின் நிலையும் இதுவே. ஆனால் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அதிகரித்துள்ள ஆவணப்பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்களில் தமிழ்நாடு பதிவுச் சட்ட விதி 4-ல் கண்ட ‘சிறப்பு அவசரநிலை’ அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூ.200/- மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் ஆவணப்பதிவை உரிய நேரத்தில் முடித்துக் கொள்ளுமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.