பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும் – சுமந்திரன்

242 0

நாட்டில் இன, மத பேதமின்றி சகல மக்களுக்கும் எதிராகவும் பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது, ஆகவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக்கோரி   நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும்.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தை கொண்டு செல்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து வேட்டை வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நீர்கொழும்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து நாடு பூராகவும் அதற்கான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட இந்த சட்டமானது இன்று நாட்டில் சகல மக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது. ஆகவே இன மத பேதம் இன்றி பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சகலரும் முன்வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே முன்னைய ஆட்சியில் இந்த சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கு பொது இணக்கம் காணப்பட்ட போதலும் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் நாட்டில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் இன்று நிலைமைகள் சுமூகமாக உள்ள காரணத்தினால் இதனை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுள்ளனர்.

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விடயங்கள் வலியுறுத்தப்படும். இப்போது நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும். பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தை கொண்டு செல்வோம்.

இந்திய பிரதமருடன் எமக்கான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் செய்துகொள்ளப்பட்டது, எனினும் அப்போது இருந்த சூழ்நிலையில் எம்மால் இந்திய பிரதமரை சந்திக்க முடியாது போனது. எனினும் எமக்கான அழைப்பு கிடைத்தால் மீண்டும் அவர்களை சந்தித்து எமது தரப்பு நிலைப்பாட்டை முன்வைப்போம் என்றார்.