முன்னாள் விளையட்டுத் துறை அமைச்சரும் தற்போதைய விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான அரச பணத்தை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதென தனது ; இறுதி நிலைப்பாட்டினை நேற்று ; 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு மன்றுக்கு அறிவித்தது.
கடந்த 8 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கினை முன்னெடுத்து செல்வதா இல்லையா என ; தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தாக்கல் செய்துள்ள வழக்கு நேற்று, கொழும்பு மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகளான அமல் ரணராஜா, ; பிரதீப் ஹெட்டி ஆரச்சி மற்றும் மகேஷ் வீரமன் ஆகிய நீதிபதிகள் முன் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது நேற்றைய தினம் வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜராகிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபாஷினி சிறிவர்தன, இந்த வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதென ஆணைக் குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
அதன்படி விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றம், எதிர்வரும் மே 10 ஆம் திகதி முதல் சாட்சி விசாரணைகளுக்கு திகதி குறித்து வழக்கின் முதல் சாட்சியாளருக்கு அறிவித்தலும் அனுப்பியது.
இவ்வழக்கில் பிரதிவாதிகள் இருவர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது.