விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் தலைவர் யார்?- பரபரப்பு தகவல்

186 0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 2-ந் தேதி நடக்கிறது.

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கான தேர்தல் 129 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் 42 பதவிகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 210 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இங்கு மொத்தமுள்ள 1,29,138 வாக்காளர்களில் 41,447 ஆண் வாக்காளர்களும், 43,085 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 84,532 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 65.46 ஆகும். இதன் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. 25 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், பா.ம.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா 2 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்திலும், 3 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் விழுப்புரம் நகராட்சியை 8-வது முறையாக தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இந்நகராட்சியானது 1.10.1919-ம் ஆண்டில் உருவானது. பின்னர் 1.10.1953 முதல் 2-ம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்நிலை நகராட்சியாக 1.4.1973 முதல் தரம் உயர்த்தப்பட்டது.

பின்னர் நகரின் வளர்ச்சியை பொறுத்து தேர்வுநிலை நகராட்சியாக 2.3.1988 முதல் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 36 வார்டுகளை கொண்டதாக இந்நகராட்சி உருவாக்கப்பட்ட நிலையில் 31.1.2011 அன்று நகராட்சி வரம்புகளில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 42 வார்டுகளை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 1922-ம் ஆண்டில் இந்நகராட்சி முதல் தேர்தலை சந்தித்தது. இதுவரை 19 தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது நடைபெற்றது 20-வது தேர்தலாகும். இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் 7 முறையும், நீதிக்கட்சி 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது நடந்த தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் விழுப்புரம் நகராட்சியை 8-வது முறையாக தி.மு.க. தன்வசப்படுத்தியுள்ளது.

இந்நகராட்சியில் இதுவரை நடந்த தேர்தல்களில் நகராட்சி தலைவர் பதவியை ஆண்கள் மட்டுமே அலங்கரித்து வந்த நிலையில் தற்போது நடந்த தேர்தலில்தான் முதன்முதலாக நகரமன்ற தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் 100 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் நகராட்சியின் நகரமன்ற தலைவர் பதவியை பெண் ஒருவர் அலங்கரிக்க உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த நகரமன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அப்போதைய நகர தலைவர் சக்கரை தோல்வியடைந்தார். அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் நகரமன்ற தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் தற்போதைய நகர செயலாளராக இருக்கும் சக்கரையின் மகளான 29-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்செல்வி பிரபு, விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண், நகரமன்ற தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தி.மு.க. கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி நடக்கிறது. அதனை தொடர்ந்து 4-ந் தேதி தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அன்றைய தினம் நகராட்சியின் முதல் பெண் நகரமன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் பொறுப்பேற்க உள்ளார். நகரமன்ற தலைவராக பதவியேற்கப்போகும் பெண் யார்? என்று அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி நகர மக்கள் மத்தியிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர மன்ற தலைவருக்கான அறை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.