பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதற்கான செயற்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முன்வைக்கவில்லை – மிச்சேல் பச்லெட்

234 0

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் சர்வதேச குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கும் செயற்திறன்மிக்க நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை முன்னெடுப்பதற்கும் தவறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட், தற்போதைய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகி இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போதுவரை பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதன் வாயிலாக நிலைமாறுகால நீதியை வலுப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையிலான எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்றும் விசனம் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்ப்பமாகவுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுவுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் 17 பக்க அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் சர்வதேச குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கும் செயற்திறன்மிக்க நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை முன்னெடுப்பதற்கும் தவறியிருப்பதாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் தற்போதைய அரசாங்கம் சர்வதேச குற்றங்களையும் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்வதற்கான தமது விருப்பமின்மையைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவந்திருப்பதுடன் மிகமோசமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய சில இராணுவ அதிகாரிகள் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தண்டனைகளிலிருந்து விலக்கீட்டைப்பெறும் போக்கு தொடர்வதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மிகமுக்கிய மனித உரிமைகள்சார் வழக்குகளில் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் அவ்வழக்கு விசாரணைகளுக்குத் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் இடையூறுகள் தொடர்பில் தனது அறிக்கையின் ஊடாகக் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள உயர்ஸ்தானிகர் பச்லெட், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உண்மையையும் நீதியையும் நினைவுகூருவதற்கான உரிமையையும்கோரி போராட்டங்களில் ஈடுபட்டுவரும் காணாமல்போனோரின் குடும்பங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளார்.

மேலும் அதிகரித்தவரும் இராணுவமயமாக்கல் மற்றும் அரசகட்டமைப்புக்களில் வெளிப்படையாகவே மேலோங்கியுள்ள சிங்கள, பௌத்தத் தேசியவாதம் என்பன சிறுபான்மையின சமூகங்கள் மேலும் ஒடுக்கப்படுவதற்கும் அவர்களது இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், முக்கிய கட்டமைப்புக்களின் சுதந்திரத்தை உறுதிசெய்வதற்கு அது மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள மிச்சேல் பச்லெட், புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 மற்றும் 34ஃ1 ஆகிய தீர்மானங்களுடன் தொடர்புடைய 40ஃ1 தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதற்குத் தற்போதைய அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டமையானது, நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் அடைந்துகொள்வதற்கு அனைவரையும் ஒன்றிணைத்து, உள்ளக ரீதியிலான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதில் அரசாங்கம் கொண்டிருக்கக்கூடிய நாட்டத்தை வெளிப்படுத்தியது.

இருப்பினும் இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதன் வாயிலாக நிலைமாறுகால நீதியை வலுப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையிலான எந்தவொரு செயற்திட்டத்தையும் இலங்கை அரசாங்கம் தற்போதுவரை முன்வைக்கவில்லை என்றும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.