கோவை மாநகராட்சி துணைமேயர் பதவிக்கு குறிவைக்கும் காங்கிரஸ்

245 0

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

உள்ளாட்சி தேர்தல் முடிந்தாலும் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ந் தேதி நடக்க உள்ளது.

உள்ளாட்சி பதவிகளை பிடிப்பதற்கு அரசியல் கட்சியினர் தற்போதே தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க.கூட்டணியே கைப்பற்றியுள்ளது. அனைத்து மாநகராட்சியிலும் தி.மு.க.வை சேர்ந்தவர்களே மேயராக இருக்க வேண்டும் என்பதில் தி.மு.க தலைமை உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சியினருக்கு துணை மேயர் பதவிகளை ஒதுக்க தி.மு.க முடிவு செய்துள்ளது.

கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 96 இடங்களை கைப்பற்றியுள்ளது. தி.மு.க. மட்டும் தனித்து 73 இடங்களை பிடித்து மேயர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.

கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தி.மு.க. கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் பலரும் மேயர் பதவிக்கு போட்டி போட்டு வருகின்றனர்.

குறிப்பாக 3 பெண்களுக்கு இடையே தான் கடும் போட்டியே நிலவி வருகிறது. இவர்களில் இருந்து யாராவது ஒருவர் தான் கோவை மாநகராட்சி முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கோவை மாநகராட்சி மேயர் பதவி தி.மு.க.வுக்கு என்று உறுதியாகி விட்ட நிலையில் துணை மேயர் பதவியை கேட்டு பெறுவதில் தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் மும்முரமாக உள்ளன.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி துணை மேயர் பதவியை எப்படியாவது கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஏனென்றால் கோவை மாநகராட்சியில் 9 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 9 வார்டிலுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் தங்கள் கட்சிக்கு துணை மேயர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருகிறது.

அதற்கு ஏற்றவாறு அந்த கட்சி காய் நகர்த்தி துணை மேயர் பதவியை கேட்டு பெற்று விட வேண்டும் என முயற்சித்து வருகிறது.

காங்கிரஸ் துணை மேயர் பதவியை கேட்டு வரும் வேளையில் அந்த பதவியை பிடிப்பதிலும் 3 பேருக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் துணை மேயர் பதவியை எதிர்பார்த்தாலும், துணை மேயர் பதவியும் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. கூட்டணி கட்சியினருக்கு மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் பதவியை கொடுக்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.