ரஷியா-உக்ரைன் இடையேயான முதல் நாள் போரின் முக்கிய நிகழ்வுகள்

210 0

உக்ரைன் மீது ரஷியா நேற்று அதிகாரபூர்வமாக போரை தொடங்கியது. உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் இந்த போரின் முதல் நாள் முக்கிய நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வை.இந்திய நேரப்படி அதிகாலை 4:52 மணி: உக்ரைன் மீது ரஷியா சைபர் தாக்குதல். அரசின் முக்கிய துறைகளின் கணினிகள் முடங்கின.

8:22 மணி: ‘உக்ரைனை தாக்காதவாறு படைகளை தடுத்து நிறுத்துங்கள், அமைதிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்’ என ரஷியாவிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கெஞ்சல்.

8:30 மணி: கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவிப்பு; குறுக்கிட்டால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என வெளிநாடுகளுக்கும் பகிரங்க மிரட்டல்.

9:04 மணி: உக்ரைன் மீதான தாக்குதல் நியாயமற்றது என அமெரிக்க ஜனாதிபதி பைடன் கண்டனம்.

9:19 மணி: ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதற்றத்தை உடனடியாக தணித்து, கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா வேண்டுகோள்.

9:47 மணி: உக்ரைனின் ஒடெசா, கார்கிவ் நகரங்களில் குண்டுவீச்சு.

10:29 மணி: உக்ரைனின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குவதாக ரஷிய ராணுவம் தகவல்.

10:34 மணி: ராணுவ சட்டத்தை அறிவித்த உக்ரைன் அதிபர், ரஷியா தாக்குதலால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அறிவுறுத்தல்.

11:23 மணி: உக்ரைனின் வான்பகுதியை அபாய பகுதியாக ஐரோப்பா அறிவித்தது.

11:30 மணி: உக்ரைன் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு சீனா அறிவுறுத்தல்.

12:18 மணி: உக்ரைனின் விமானப்படை தளங்கள் மற்றும் தளவாடங்களை தகர்த்து விட்டதாக ரஷிய ராணுவம் அறிவிப்பு.

1:16 மணி: இதுவரை இல்லாத அளவுக்கு ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஆலோசித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.

2:40 மணி: உக்ரைனின் வான்பகுதியை ரஷியாவிடம் இருந்து பாதுகாக்க ராணுவ உதவி அளிக்குமாறு உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்.

3:21 மணி: ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்து விட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு.

3:32 மணி: ரஷியாவின் தாக்குதலில் இதுவரை 40 பேர் பலியாகி இருப்பதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தகவல்.