பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்ஸன் நாகவத்தயின் பணிப்புரையின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானக்கவின் கண்காணிப்பில், மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பல்லேவெல தலைமையிலான குழுவினர், மன்னார் – எழுத்தூர் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது வீட்டின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்த கடல் ஆமைகள் 05 மீட்கப்பட்டன. எனினும், அவ்வீட்டில் சந்தேகநபர்கள் எவரும் இருக்கவில்லை.
மீட்கப்பட்ட ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடை கொண்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் மேலதிக சட்ட நடவடிக்கைகளின் பின்னர் கடலாமைகளை கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் குறித்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.