பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்றும் பல இடங்களில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இன்று காலை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய கையெழுத்து போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் செயற்பாடு வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை அறிவித்துள்ளது.
தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க கோரி கையெழுத்து பெறும் செயற்பாடு இலங்கையில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை பழைய பேருந்து நிலையம், இலுப்பையடி, வைரவர்புளியங்குளம் சந்தி, குருமன்காடு சந்தி ஆகியவற்றிலும் செட்டிகுளம் பேருந்து நிலையத்திலும் நெடுங்கேணி – பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் காலை 8 மணியிலிருந்து கையொப்பம் பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே (தற்காலிக) எமது சட்டப்புத்தகங்களில் காணப்படும் மிகக் கொடூரமான சட்டமாக தற்போதும் காணப்படுகிறது. 1979ம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், அதன் தலைப்பில் தெரிவிப்பது போல, (தற்காலிக) 6 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 வருடகாலங்கள் நீடித்து, அநீதியை விளைவித்தும் அநேகருக்கு துன்பத்தினையும், கஷ்டங்களையுமே வழங்கியுள்ளது.
இந்தச் சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றன.
உண்மையில், விசாரணை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என்பது அனுமானமாகும். சட்டத்தின் பிரகாரம் காவல்துறையினரிடம் வழங்கப்படும் எந்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளாது.
ஆனால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மாத்திரமே விதிவிலக்காக, ஒரு உதவிக் காவல் அத்தியட்சகர் பதவிக்குக் குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்குமூலம் குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அது ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புக்களுக்கு வழிவகுத்தது. உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதே வேளையில், ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறுவதற்கும் , ஒரு தீர்ப்பினை வலுவாக்க ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் பல குற்றம் புரியாதவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒப்புதல் வாக்குமூலங்கள், தடுப்புக்காவல் மற்றும் பிணை இல்லாமல் காவலில் வைப்பதற்கான விதிகள் ஆகியவை காவல்துறை சித்திரவதை நிகழ்வுகளை அதிகரிக்க செய்துள்ளது.
இக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரசுரிக்கப்பட்ட தீர்ப்புக்களை அவதானித்தால் இதனை கண்டுகொள்ளமுடியும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதியளித்திருந்தது. 2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது,
இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதாக உறுதியளித்த இவ் அரசு தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை ‘சீர்திருத்தம்’ செய்வதற்காக 2022 ஜனவரி 27 ஆம் திகதி அதன் திருத்தத்திற்கான சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அமுலாக்கங்ளிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகளிலும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இந்தப் பின்னணியில் நாம், பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்தை பொறுப்பேற்க வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.