முறி விநியோகம் தொடர்பான விவாதம் இன்று…

277 0

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த கோப் குழு அறிக்கையின் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

காலை 9.30 முதல் இரவு 7.30 வரையில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை அரசாங்கம் பிற்போட முயற்சிப்பதாக ஜே. வி. பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மத்திய வங்கியின்பிணை முறி மோசடிகள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை மீது இன்று விவாதம் நடத்துவதாக, இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தாரர்.

இதனூடாக மத்திய வங்கி பிணை முறி தொடர்பான விவாதத்தை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விவாதம் நாடாளுமன்றத்தை மேலும் சக்திமயப்படுத்தும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.