சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் மட்டும் நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது – ஹர்ஷ டி சில்வா

220 0

நாடு கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் மட்டும் நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.  இதற்கு மாற்று வேலைத்திட்டம் என்ன, எவ்வாறு நெருக்கடியில் இருந்து மீள்வது என்பது குறித்து ஆராய வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் நிலைமை குறித்து நாம் புதிதாக எதனையும் கூற வேண்டிய அவசியம் இல்லை, சகலருக்கும் நாட்டின் நிலைமை என்னவென்பது தெரியும். ஆனால் ஒரு சில வாரங்களில் நாட்டின் நிலைமையை சரிசெய்துவிட முடியும், இப்போதும் எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மை மற்றும்  யதார்த்தம் மாறுபட்டதாகும். கடந்த ஆண்டில் 7.8 பில்லியன் டொலராக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு இந்த ஆண்டு ஜனவரியில் 2.3 பில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது. அதிலும் 1.5 பில்லியன் சீன யுவானாகும். ஆகவே 700 மில்லியன் டொலர் பெறுமதியே கைவசம் உள்ளது.

அதனையே செலவு செய்ய முடியும். அதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அரசாங்கம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. எதிர்பார்த்ததை விடவும் 40-50 வீதத்தினால் வருவாய் குறைவடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில், 60 வீதத்தினால் மாதாந்த வருவாய் குறைவடைந்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணிகளை அரசாங்கம் கூறுகின்றது, ஆனால் எமது வலயத்தில் ஏனைய நாடுகளை அவதானித்தால் அந்த நாடுகளில் வருவாய் அதிகரித்துள்ளன. இலங்கையில் மட்டுமே இந்த வீழ்ச்சி காணப்படுகின்றது. நாட்டிற்கு மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வருவதாக அரசாங்கம் கூறினாலும், இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளை வைத்து நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணமுடியாது.

நிதி நெருக்கடிக்கு காணிகளை விற்கவும் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது, அதேபோல் கைமாற்றல் கடன்களை பெற்றும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இன்று நாட்டில் நிலக்கரி இல்லை, எண்ணெய் இல்லை, மருந்து பொருட்கள் இல்லை, பால்மா இல்லை, எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, சீமெந்து இல்லை, இரும்பு இல்லை. இதற்கும் அப்பால் எம்மால் மிகப்பெரிய அளவிலான டொலர் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு முன்னைய அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களே காரணம் எனவும் அரசாங்கம் குற்றம் சுமத்திக்கொண்டுள்ளது. ஆனால் அதில் உண்மையில்லை. யார் என்ன கூறினாலும் இன்று நாம் கடன் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளோம். இதற்கு மாற்று வேலைத்திட்டம் என்ன, எவ்வாறு நெருக்கடியில் இருந்து மீள்வது என்பது குறித்து ஆராய வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லை என்பது குறித்து அரசாங்கம் தெளிவான தீர்மானம் எடுக்காது உள்ளது. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே இது குறித்து நாம் சுட்டிக்காட்டினோம். அன்றே சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருந்தால் இந்த நெருக்கடிகளில் இருந்து மீண்டிருக்க முடியும் என கூறினோம். ஆனால் இன்றைய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் மட்டுமே நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கும் இல்லை.

ஏனென்றால் கடன் நிலைபேறான தன்மை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பெருபேருக்கு அமைய நிலைபேறான கடன் தன்மைகள் காணப்பட்டால் மட்டுமே கடன் மீள் கட்டமைப்பு செய்யாது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் மீள முடியும்.  நிலைபேறான கடன்தன்மை இல்லையென்றால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு மட்டுமே எம்மால் மீள முடியாது.

அதையும் தாண்டி கடன் மீள் கட்டமைப்பை செய்தாக வேண்டும். அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடன்களை செலுத்தாது நிவாரணக் காலத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். இந்த அறிக்கையை எமக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் யதார்த்தம் என்னவென்பதை எம்மாலும் விளங்கிக்கொள்ள முடியும். மாறாக நிவாட் கப்ராலின் கருத்துக்களில் எந்த பயனும் இல்லை என்றார்.